சுகாதாரத் துறை ஊழியர்கள் நாடு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் – சம்பளம், நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு.!!!
நாட்டின் சுகாதாரத் துறையில் நீடித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, இன்று (20) பல முக்கிய வைத்தியசாலைகள் முன்பாக சுகாதார ஊழியர்கள் பாரிய கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை (ராகம), கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சுகாதார ஊழியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
▪️ சம்பளம் இன்றி வாரத்திற்கு கூடுதலாக பணியாற்றும் 08 மணித்தியாலங்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
▪️ சுகாதாரத் துறையில் காணப்படும் 14,000 பணியிட வெற்றிடங்களை உடனடியாக நிரப்பி, இடமாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
▪️ மேலதிக நேரக் கொடுப்பனவு விகிதத்தை (Overtime Rate) 1/160 ஆக மாற்ற வேண்டும்.
▪️ அனைத்து தற்காலிக நியமனங்களையும் உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும்.
▪️ நீக்கப்பட்டுள்ள பொது விடுமுறை தின (PH) கொடுப்பனவுகளை மீண்டும் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நியாயமானவை என வலியுறுத்திய சுகாதாரப் பணியாளர்கள், தங்களது உரிமைகளை பெற்றுத்தர அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.





