தென்கடலில் படுகாயமடைந்த மீனவரை: சிகிச்சைக்காக கரைக்கு கொணடுவந்த கடற்படை.!!!
-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-
இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் பல நாள் மீன்பிடிப் பணியில் ஈடுபட்டிருந்த போது படுகாயமடைந்த மீனவரை, இலங்கை கடற்படையினர் அவசரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நடவடிக்கை கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
2026 மார்ச் 21ஆம் திகதி தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களை ஏற்றிச் சென்ற ‘ஹசிது புதா 1’ (IMUL-A-0485 TLE) என்ற பல நாள் மீன்பிடிக் படகு, இலங்கைக்கு தெற்கே 149 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. இதன்போது, படகில் இருந்த ஒரு மீனவர் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மீனவரை உடனடியாக கரைக்குக் கொண்டு வர உதவுமாறு மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடற்படை விரைவாக நடவடிக்கை எடுத்தது. தெற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.
அதன்போது, கடற்படையினர் பாதிக்கப்பட்ட மீனவருக்கு ஆரம்ப முதலுதவி வழங்கி, அவரை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு கடற்படைத் தளத்தில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், கடற்படை தொடர்ந்து கடலில் அவசர நிலையில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு உதவ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

