கடற்படையின் 263வது ஆட்சேர்ப்பு: 373 பயிற்சி மாலுமிகள் சேவையில் இணைப்பு.!!!
இலங்கை கடற்படையின் 263வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த மொத்தம் 373 பயிற்சி மாலுமிகள் தங்களின் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து கடற்படை சேவையில் இணைந்தனர்.
நேற்று (27) காலி, பூஸ்ஸில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் “நிபுன” நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வின் மூலம் இவர்கள் சேவையில் இணைக்கப்பட்டனர்.
இந்த ஆட்சேர்ப்பில் நிரந்தர கடற்படையைச் சேர்ந்த 230 பயிற்சி மாலுமிகளும், தன்னார்வ கடற்படையைச் சேர்ந்த 143 பயிற்சி மாலுமிகளும் அடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜனக மாரபகே பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். அவர் சிறந்த பயிற்சி மாலுமிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
சிறந்த பயிற்சி மாலுமிக்கான விருதை பயிற்சி மாலுமி டபிள்யூ.எம்.எம்.என். வீரசேகர பெற்றுக்கொண்டார். அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவராக பெண் பயிற்சி மாலுமி எஸ்.எச். திவானி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த விளையாட்டு வீரராக எம்.எம்.பி.என். மாபா தெரிவாகியதுடன், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக ஏ.எம்.என்.ஏ. அதிகாரி விருது பெற்றார்.
மேலும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருதை ஏ.எம்.ஆர். பண்டார பெற்றதுடன், சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாக என்.எல்.டி.டி.எஸ். லியனகே தேர்வு செய்யப்பட்டார். 263வது ஆட்சேர்ப்பின் சிறந்த பிரிவாக “அனுலா” பிரிவு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள், பயிற்சி மாலுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.












