கனமழையால் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது – மக்கள் அவதி.!!!
-மஸ்கெலியா – செ.தி. பெருமாள்-
நாவலப்பிட்டி நகரில் இன்று (21) மதியம் பெய்த கனமழையினால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக நாவலப்பிட்டி பேருந்து நிலையம் மற்றும் நாவலப்பிட்டி–கண்டி பிரதான வீதியில் சுமார் ஒரு அடிக்கு மேல் மழைநீரும் கழிவுநீரும் தேங்கி நிற்கும் நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக பேருந்து நிலையப் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களுக்குள் மழைநீர் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலரும் இந்த நிலைமையால் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவலப்பிட்டி நகரில் கனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு மழைநீர் தேங்கி நிற்கும் நிலை உருவாகி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் நகரில் உள்ள அனைத்து வடிகால்களையும் முறையாக சுத்தம் செய்து, தேங்கும் மழைநீரை மகாவெலி கங்கை நோக்கி வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




