உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

திருகோணமலை மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு; நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.!!!

• ரூ.2,403 மில்லியன் செலவில் 08 மாடிக் கட்டிடம் – 2028 மே மாதத்தில் பணிகள் நிறைவு பெறும்.

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவானதும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடிய இருதய சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டன.

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஊடாக முன்னெடுக்கப்படும் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.2,403 மில்லியன் செலவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

08 மாடிகளைக் கொண்ட கட்டிடம்

அதிநவீன அறுவை சிகிச்சைக் கூடங்கள், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வுகூட வசதிகளை உள்ளடக்கிய இந்த புதிய இருதய சிகிச்சைப் பிரிவு கட்டிடம் 08 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் 2028 மே மாதமளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் நினைவுப் பலகையை திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, பின்னர் வைத்தியசாலைப் பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ரூ.7,100 மில்லியன் பெறுமதியான நிர்மாணங்கள்

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ,

“கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நாம் இந்த இடத்திற்கு வருகை தந்து, இருதய சிகிச்சைப் பிரிவின் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம். தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, இத்திட்டத்தின் பணிகளை ஆரம்பித்துள்ளோம். 2028 மே மாதமளவில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

மேலும், ஜனாதிபதி தலைமையில் இன்று நான்கு முக்கிய சுகாதார நிர்மாணத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய உதவியின் கீழ் ரூ.600 மில்லியன் செலவில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், உபகரணங்களுடன் சேர்த்து அத்திட்டத்தின் மொத்த பெறுமதி ரூ.4,185 மில்லியன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் நிர்மாணப் பணிகளுக்காக ரூ.2,403 மில்லியனும், மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ரூ.1,782 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, முல்லைத்தீவு மருத்துவமனையில் ரூ.600 மில்லியன் செலவில் நான்கு மாடிகளைக் கொண்ட மருத்துவ வாட்டை நிர்மாணிப்பதற்கும், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ரூ.3,000 மில்லியனுக்கும் அதிக பெறுமதியில் இருதய சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், நிர்மாணப் பணிகளாக சுமார் ரூ.7,100 மில்லியன் பெறுமதியான திட்டங்களும், மருத்துவ உபகரணங்களுடன் சேர்த்து சுமார் ரூ.12,000 மில்லியன் பெறுமதியான சுகாதார வசதிகளும் இன்று நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் இருந்த திட்டம்”

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கருத்துத் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார சேவையில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டதாகவும், கடந்த 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்த ஒரு திட்டமே இன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியினால் JICA நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், பொருளாதாரத்தை மறுசீரமைத்து ஸ்திரப்படுத்த ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் திருகோணமலை மாவட்டத்திற்கு மாத்திரமன்றி முழு கிழக்கு மாகாணத்திற்கும் முக்கியமான சேவையை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

“ஜப்பான் தொடர்ந்து உதவத் தயாராக உள்ளது”

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு வழங்கப்படும் இந்த உதவி, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையின் நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இதே மருத்துவமனையில் நடைபெற்ற கழிவு முகாமைத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின்போது, இந்தத் திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும், இன்று அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், சுகாதாரத் துறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிலையான சுகாதார சேவையை உருவாக்கவும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

நிகழ்வில் மதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, அரச அதிகாரிகள், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata, JICA இலங்கை அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி Shigeo Honzu, வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியசாலைப் பணிக்குழாமினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166794

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time