“ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலைத்திட்டங்கள்” நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.!!!
-கற்பிட்டி, எம்.எச்.எம். சியாஜ்-
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டுகை அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலைத்திட்டங்கள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளர் பி.ஜி.எஸ்.என். பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம். பைசல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
நாடு முழுவதும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து 25,000 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், கிராம மட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 83 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து பாலக்குடா மற்றும் புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
பாலக்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிநபர் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு நந்தியாவட்டை (இந்தமல்) மலர் வளர்ப்புக்குத் தேவையான மலர்ச்செடிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதேவேளை, புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தில்லையடி கிராமத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த கடல் நீர் விநியோகப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கடல் நீரை சீராகப் பெற்றுக்கொள்ள உதவும் நவீன சொலுசு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி திட்டமிடல் அதிகாரி கே.பி.சீ.ஜீ. குலசேகர, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், பிரஜா சக்தி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.





