புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் புதிய முன்னேற்றம்; அநுராதபுரத்தில் மின்கல சேமிப்பு கட்டமைப்பு.!!!
அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 10 மெகாவொட் / 40 மெகாவொட் மணிநேர (MWh) மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (18) தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனை அதிகரிப்பதுடன், தேசிய மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
ஸ்டோர்எக்ஸ் (Storex) தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின்கல வலுசக்தி சேமிப்பு தொழில்நுட்பமானது, தற்போதைய வலுசக்தித் துறையில் முக்கியமானதும் வினைத்திறன் மிக்கதுமான தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் பகல் நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய மின்சக்தியை சேமித்து, இரவு நேரங்களில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் அந்த மின்சக்தியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும்.
இதன் ஊடாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், தேசிய மின் கட்டமைப்பின் தொடர்ச்சியான மற்றும் ஸ்திரமான மின்சார விநியோகத்துக்கும் பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








