விவசாய வளர்ச்சிக்கு பாரம்பரிய அறிவும் நவீன தொழில்நுட்பமும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
எதிர்காலச் சந்ததியினரின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய விவசாய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்று (16) நடைபெற்ற 2026 உலக உணவு தின விழாவில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இன்றைய புத்தாக்கம் – நாளைய ஊட்டச்சத்து” (Innovate Today. Nourish Tomorrow) என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான உலக உணவு தின நிகழ்வு நடைபெற்றது.
பாரம்பரிய விவசாய முறைகளில் காணப்படும் அனுபவங்களையும் அறிவையும் நவீன தொழில்நுட்பங்களுடன் இணைப்பதன் மூலம் விவசாயத் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவையான சத்தான உணவையும் நிலையான உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், உணவு உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி அரசாங்கம் இத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.







