நுவரெலியாவில் கடும் மழையால் திடீர் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு; விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.!!!
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (17) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழையினால் வீதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதி, நுவரெலியா – பதுளை வீதி, நுவரெலியா – ஹட்டன் வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளிலும், நுவரெலியா நகரின் சில சிறு வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பிரதேச மக்கள் மற்றும் வாகன சாரதிகள் போக்குவரத்தை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மத்திய மலைநாட்டில் அண்மைய நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நுவரெலியா பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகளும் பல விவசாய நிலங்களும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாகப் பயிரிடப்பட்டுள்ள மலைநாட்டு மரக்கறிப் பயிர்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாமையே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணம் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் விவசாயச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளநீர் தேங்கும் பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




