ஷாணி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக உயர்வு: நிலுவை ஊதியம் உட்பட வழங்க தீர்ப்பாயம் உத்தரவு.!!!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷாணி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்மானம் 2026 மே 13 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பதவி உயர்வு 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான நிலுவை ஊதியம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் ஒருவராக கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டின் பல முக்கிய மற்றும் சிக்கலான குற்றப் புலனாய்வுகளை முன்னெடுத்த அனுபவமிக்க அதிகாரியாக அறியப்படுகிறார்.
2020 ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர், சுமார் 11 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு 3/2018 சுற்றுநிருப விதிகளின் கீழ் மீண்டும் சேவையில் இணைந்த அவர், பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.