பாகிஸ்தான் கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன: இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சி.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
நல்லெண்ண வருகை மற்றும் விநியோக, சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான ‘PNS Taimur’, ‘PNS Aslat’ ஆகிய கப்பல்களும், ‘PNS Hangor’ என்ற நீர்மூழ்கிக் கப்பலும் திங்கட்கிழமை (01) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.
குறித்த கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரியாதையுடன் வரவேற்றனர்.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த ‘PNS Taimur’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் நியாமத் சயீத் கான் (Niamat Saeed Khan), ‘PNS Aslat’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் நாதிர் மதீன் அஃப்ரிடி (Nadir Mateen Afridi), மற்றும் ‘PNS Hangor’ நீர்மூழ்கிக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் உசைர் பாரூக் (Uzair Farooq) ஆகியோர் கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நல்லெண்ணப் பயணத்தின் போது, கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் இலங்கையின் முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து மேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் கடற்பரப்பில் ‘PASSEX’ எனப்படும் கடற்படைப் பயிற்சியிலும் பங்கேற்கவுள்ளன.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கடற்படை ஒத்துழைப்பு, நட்பு உறவு மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வருகை அமைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.









