எரிபொருள் விலை உயர்வுடன் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு.!!!
நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள எரிபொருள் விலை திருத்தத்திற்கமைவாக முச்சக்கர வண்டி கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி சேவையில் ஈடுபடும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்தக் கட்டண உயர்வு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கட்டண திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ முன்மொழிவை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான இறுதி முடிவு அதிகாரசபையின் அனுமதியைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து துறையில் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டண உயர்வு பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.