ஷிரான் பாசிக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 10 அரசியல்வாதிகள்; விசாரணைக்கு தயாராகும் குற்றப் புலனாய்வுப் பிரிவு.!!!
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் உள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் பல அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்தேகநபரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் சுமார் 10 முக்கிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணை வட்டாரத்தில், இரு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரு அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விசாரணைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரச்சார காலங்களில் ஷிரான் பாசிக்கினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவிலான பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக பதவி வகித்த ஒருவர், ஷிரான் பாசிக்கிற்கு அனுமதியின்றி காணிகளில் பலமாடிக் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக குறித்த முன்னாள் அமைச்சர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவிலான பணத்தைப் பெற்றதாகவும் விசாரணைத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஷிரான் பாசிக் நீண்டகாலமாக சில அரசியல்வாதிகளின் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாரியளவில் பணம் செலவிட்டிருக்கலாம் என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விடயங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.