காத்தான்குடியில் இடம்பெற்ற முப்பெரும் விழா; சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு கௌரவம்.!!!
காத்தான்குடியில் ஐக்கிய மீலாத் விழா உட்பட முப்பெரும் விழாக்கள் நேற்று (26) புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன.
ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முப்பெரும் விழாவில், ஐக்கிய மீலாத் விழா, அமைப்பின் 10ஆவது ஆண்டு நிறைவு எழுச்சி விழா, பரிசளிப்பு, கௌரவிப்பு மற்றும் பாராட்டு விழா ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
விழாவை முன்னிட்டு காத்தான்குடி பிரதான வீதியில் சிறப்பான பேரணியொன்றும் நடைபெற்றது.
மேலும், தாரிகுன் நபி போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் உள்ளிட்ட பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான ரீ.எல். ஜவ்பர்கான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி அல்-ஹாபிழ் எச்.எம். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரப் பிரிவு பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிறப்புரையை காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி AGM. அமீன் பலாஹி நிகழ்த்தினார்.
சமயப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.




