15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு.!!!
மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சேவைகள் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டாலும், அவற்றில் தடங்கல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 சேவைகள் வருமாறு:
1. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்.
2. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம்.
3. மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நோயாளர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகள்.
4. பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்திற்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகள்.
5. வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா வசதிகளைப் பேணுதல்.
6. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவைகள்.
7. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல்.
8. மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் களமட்ட அதிகாரிகள் மூலமாக வழங்கப்படும் சேவைகள்.
9. அவசர நோயாளர் காவு வண்டி (Gilan Ratha) சேவைகள்.
10. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகள்.
11. உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் நீர், மின்சாரம், தீயணைப்பு, கழிவுவகற்றல் மற்றும் துப்புரவுச் சேவைகள்.
12. நீர்ப்பாசனம் தொடர்பான அனைத்து சேவைகள்.
13. தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறை சார்ந்த அனைத்து சேவைகள்.
14. தாழ்நிலங்களை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான சேவைகள்.
15. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சார்ந்த அனைத்து சேவைகள்.
அரசாங்கம் வழங்கும் முக்கிய சேவைகள் இடையூறு இன்றி தொடர்வதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.