மீன்பிடிப் படகில் மறைத்து கடத்தப்பட்ட 420 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு.!!!
கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்
இலங்கையின் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 189 கிலோகிராம் 246 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனிறு (05) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மீன்பிடிப் படகு, சந்தேகநபர்கள் சகிதம் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக வியாழக்கிழமை காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 100 பொதிகளில் அடைக்கப்பட்ட 132 கிலோகிராம் 026 கிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளும், 52 பொதிகளில் அடைக்கப்பட்ட 57 கிலோகிராம் 220 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த வீதிப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாய்க்கும் (420 கோடி ரூபாய்) அதிகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன, மேற்கு கடற்படை கட்டளையின் பிரதி தளபதி கொமடோர் அருண விஜேவர்தன உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் நாட்டின் கடற்பரப்பை முழுமையாகக் கண்காணித்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் 189 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் இலங்கை கடற்படை, கடலோரக் காவல்படை, ஏனைய பாதுகாப்புப் படையினர், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கை கடற்படையினர் 75 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், போதைப்பொருள் விநியோகம் மற்றும் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டங்களை உருவாக்குதல், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சாதனங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் கடத்தலுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகள் மூலம் 114 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட ஆபத்தான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மாத்திரம் 73 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிகரமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய கடற்படையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதுடன், போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகங்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.




