இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50 சதவீதத்தால் அதிகரிப்பு: புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஆபத்து.!!!
இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் சமன் இடகொட தெரிவித்துள்ளார்.
2010 முதல் 2020 வரையான காலப்பகுதிக்கான தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடமும், குறிப்பாகப் பெண்களிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைப்பிடித்தல் மாத்திரமன்றி, பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளும் பங்களிப்புச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிறர் வெளியிடும் சிகரெட் புகையைச் சுவாசித்தல், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, காற்றோட்டம் குறைந்த வீடுகளில் விறகு உள்ளிட்ட திட எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
எனவே, புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதுடன், காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பேணுதல் தொடர்பிலும் பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.