மீன்பிடிக்கச் சென்ற 66 வயது முதியவர் மாயம்: ஆளற்ற நிலையில் மிதந்த தெப்பம்; கடலில் தீவிர தேடுதல்.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
தொடுவாவை, பருதெல்பொல பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய வர்ணகுலசூரிய சுனில் பெர்னாண்டோ என்ற முதியவர், மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதுடன், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை (02) அதிகாலை 4.00 மணியளவில் வழமைபோன்று தனது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடியில் ஈடுபடுவதற்காகத் தெப்பத்தில் கடலுக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள், இது தொடர்பில் தொடுவாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸாரும் உறவினர்களும் அவரைத் தேடி வந்த நிலையில், ஆழ்கடல் பகுதியில் அவர் பயன்படுத்திய தெப்பம் மற்றும் மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் எவருமின்றித் தனியாக மிதந்து கொண்டிருப்பதை சக மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், குறித்த முதியவர் கடலில் காணாமல் போயிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன், நிலவிய சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகத் தெப்பம் கவிழ்ந்திருக்கலாம் எனப் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போன முதியவரை உயிருடன் மீட்கும் நோக்கில் அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து ஆழ்கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.