பெண்களின் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, அதிகாரத்திலும் சமத்துவம் அவசியம்: பிரதமர்.!!!
பெண்களின் தலைமைத்துவம் பாலின சமத்துவத்திற்கு மாத்திரமன்றி, உலகின் நிலைபேறான வளர்ச்சிக்கும் அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அரசியல் தலைமைத்துவம் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு எதிரான அரசியல் வன்முறைகள் தடுக்கப்படுவதோடு, அரச கொள்கைகளை வகுக்கும் போது பெண்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மாத்திரம் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே பெண்களின் உண்மையான தலைமைத்துவப் பங்களிப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (02) நடைபெற்ற பொதுநலவாய மகளிர் மன்றத்தின் (Commonwealth Women’s Forum – CWF) ஆரம்ப அமர்வில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்: வளமான மற்றும் மீளெழுச்சியுடைய பொதுநலவாயத்திற்கான முதலீடு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்வமர்வில், பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், அரசியல் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் சமத்துவமான சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்களின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் தலைமைத்துவத்திற்கான தடைகளை நீக்கி, அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துவது வளமானதும் மீளெழுச்சியுடையதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய முதலீடாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






