சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடற்படை அதிரடி: 47 பேர் கைது; 13 படகுகள் பறிமுதல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 டிங்கி படகுகள் மற்றும் 2 வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
2026 ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கையின் கரையோர மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, திருகோணமலை இறக்கண்டி, கரையவேலி, காத்தான்குடி, மாங்காடு, சவுக்கடி, ஜயநகர், ஜின்னபுரம், சல்லிக்கோவில், போல் பொயிண்ட், சப்பல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், போல்டர் பொயிண்ட், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வெட்டித்தலத்தீவு உள்ளிட்ட கடற்பிரதேசங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மட்டக்களப்பு, வாழைச்சேனை, குச்சவெளி, கோட்பே, யாழ்ப்பாணம் மயிலிட்டி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரின் கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



