சட்டவிரோத கடலட்டை கடத்தல் முயற்சி தோல்வி; 12 சந்தேகநபர்கள் கைது.!!!
மன்னார் சௌத்பார் கடற்கரை மற்றும் அதனை அண்மித்த தரைவழிப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாகக் கடத்த முயற்சிக்கப்பட்ட 14,072 கடலட்டைகள், 3 டிங்கி படகுகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கஜபா நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையின்போது, கடல்வழியாக சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கடலட்டைகளை அனுமதியின்றி தரைவழியாகக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 24 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


