காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விபத்து; 28 வயது இளைஞர் உயிரிழப்பு.!!!
காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய பட்டதாரி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்த இளைஞர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டம் பெற்ற பட்டதாரி என்பதும், அரசுப் பணியில் சேர்வதை தனது இலட்சியமாகக் கொண்டு நீண்டகாலமாக முயற்சித்து வந்தவரும் ஆவார் என்பது தெரியவந்துள்ளது.
நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக மேசன் மற்றும் ஓடாவி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மூத்த சகோதரர் இலங்கை பொலிஸில் உத்தியோகத்தராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தபோதிலும், பணிப்பொறுப்புணர்வுடன் கட்டுமானப் பணிக்குச் சென்றிருந்த அவர், நிர்மாணிக்கப்பட்டு வந்த இரு மாடிக் கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்று தூணுக்காக பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தூண் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பல கனவுகளுடனும், அரசுப் பணியில் இணையும் எதிர்கால நம்பிக்கையுடனும் வாழ்ந்த இளம் பட்டதாரியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், பல்கலைக்கழக சமூகத்தினரையும் மட்டுமன்றி, முழு பிரதேச மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


