இலங்கையில் கிரிப்டோ நாணயங்களுக்கு சட்ட ஒழுங்குமுறை; அமைச்சரவை ஒப்புதல்.!!!
இலங்கையில் ‘கிரிப்டோ’ உள்ளிட்ட நிகழ்நிலைச் சொத்துக்கள் (Virtual Assets) மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேவை வழங்குநர்களை (Virtual Asset Service Providers – VASPs) சட்டப்பூர்வமாக ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இலங்கையில், நபர்களுக்கிடையேயான நேரடி பரிவர்த்தனைகள் மற்றும் முறையற்ற இணையத்தளங்கள் ஊடாக நிகழ்நிலைச் சொத்துக்களில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான தளங்கள் நாட்டின் ஒழுங்குமுறை அதிகாரங்களின் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டு செயல்படுவதால், அடிப்படை இணக்கப்பாடு, பதிவு, அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட சட்டத் தேவைகளை பின்பற்றாமல் இயங்கிவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நிகழ்நிலைச் சொத்துக்கள் தொடர்பான நடவடிக்கைகளை சட்டரீதியாக ஒழுங்குபடுத்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நிதி குற்றங்கள் மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனைகளைத் தடுக்கவும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.