கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி சோதனை; ரூ.200 மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் கைப்பற்றல்.!!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.201.89 மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்தி வர முயன்ற 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவரை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (26) அதிகாலை கைது செய்துள்ளனர்.
கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தோஹா வழியாக கட்டார் எயார்வேஸ் நிறுவனத்தின் QR662 விமானத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்த சந்தேகநபர், ஓவியராக பணியாற்றுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டபோது, அவற்றின் உள்ளே மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற 80 ஹஷிஷ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை 20.117 கிலோகிராம் எனவும், அதன் சந்தைப் பெறுமதி சுமார் ரூ.201.89 மில்லியன் எனவும் சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் சந்தேகநபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாரிய பெறுமதியுடைய போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.




