ஈரான் போரில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு; ஆயுதக் கையிருப்பில் பற்றாக்குறை.!!!
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்கா அதிகளவிலான வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளதுடன், இதனால் அதன் மூலோபாய ஆயுதக் கையிருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பரிசோதகர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கொங்கிரஸ் அவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டாய அறிக்கையில், பெப்ரவரி 28 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் ‘ஒபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கைக்கான மதிப்பிடப்பட்ட செலவு 33.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 22.3 பில்லியன் டொலர்கள் வெடிபொருட்களுக்காக மட்டும் செலவிடப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கான வெடிபொருள் பயன்பாடு, அமெரிக்காவின் மூலோபாய கையிருப்பில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை மீள்நிரப்புவதற்கான தொழில்துறை உற்பத்தித் திறனில் காணப்படும் சவால்களையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க விமானப்படைக்கும் இழப்பு
போரின் போது அமெரிக்க விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்புகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி, 4 எப்-15 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், ஒரு எப்-35 போர் விமானம் மற்றும் 7 கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 30 எம்கியூ-9 ரீபர் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) அழிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நீண்ட தூர வழிகாட்டப்படும் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பில் ஏற்பட்ட பற்றாக்குறை, ஈரானுடனான மோதலில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை பாதித்ததாக முன்னதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அமெரிக்க இராணுவத் தளங்களும் சேதம்
மோதலின்போது குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சேதங்களுக்கான செலவுகள் மொத்தப் போர்ச் செலவில் சேர்க்கப்படவில்லை. குறித்த இராணுவத் தளங்கள் அனைத்தும் மீளக் கட்டப்படுமா மற்றும் அதற்கான செலவை யார் ஏற்கப் போகின்றனர் என்பது இன்னும் தெளிவாகவில்லை என அறிக்கை குறிப்பிடுகிறது.
11 அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழப்பு
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், போரின்போது குறைந்தது 11 அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், போருடன் நேரடியாக தொடர்பில்லாத காரணங்களால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவிடம் போதுமான ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த அறிக்கை ஆயுதக் கையிருப்பு தொடர்பான புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடைய மோதல்கள் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் விளைவாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
