லிபியாவில் தரையிறங்கிய தனியார் ஜெட் விமானத்தில் திடீர் தீ; மூவர் பத்திரமாக மீட்பு.!!!
லிபியாவின் மிஸ்ராட்டா சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானமொன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து புறப்பட்ட “செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட்” ரக தனியார் ஜெட் விமானமே இந்த விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்ராட்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையை விட்டு விலகிய விமானத்தில் பின்னர் தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து விமான நிலையத்தின் அவசரகால தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
விமானத்தில் இருந்தவர்களுக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த தனியார் ஜெட் விமானம் துருக்கியின் முன்னணி நிறுவனமான அக்ஃபென் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஹம்டி அகின் என்பவருக்குச் சொந்தமானது என துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், விபத்து இடம்பெற்ற நேரத்தில் விமானத்தில் ஒரு முக்கிய பிரமுகர் ஒருவர் இருந்ததாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், விமானத்தில் இருந்த முக்கிய பிரமுகர் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



