கொழும்பு துறைமுக நகரில் கொலை; மூன்று சீனர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரல்.!!!
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 23, 2026 அன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்களது விசா காலம் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால், சந்தேகநபர்கள் வான் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு தப்பிச் செல்லக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லும் முன்னர் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.