பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம்: அமைச்சரவை அனுமதி.!!!
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை” பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கான ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவொன்று முன்னதாக நியமிக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு, 2026 ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், குறித்த சட்டமூலம் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.