மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நவீன இதயவியல் பிரிவு திறந்து வைப்பு.!!!
கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் ரூ.432 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய இதயவியல் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதியின் திறப்பு விழா நேற்று (17) நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில், வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலையின் சிரேஷ்ட இதய நோயியல் நிபுணர் டொக்டர் அருள்நிதி, பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புதிய இதயவியல் பிரிவு மூலம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட இதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.








