ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்: சுரேஷ் சலே மீது கடும் குற்றச்சாட்டு.!!!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) தலைவரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, ஈஸ்டர் தாக்குதல் சதித்திட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட சுரேஷ் சலேயின் மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசிகளுக்கான கடவுச்சொற்களை வழங்க அவர் மறுத்து வருவதாகவும், இது உண்மைகளை மறைக்கும் முயற்சியாக இருக்கக்கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், விசாரணைகளைத் திசைதிருப்பவும் முடக்கவும் பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், எந்தவொரு உண்ணாவிரதப் போராட்டமோ அல்லது சத்தியாக்கிரகமோ இந்த விசாரணைகளை நிறுத்த முடியாது எனத் திட்டவட்டமாக கூறினார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை விசாரணைகள் தொடரும் என்றும், எத்தகைய அரசியல் அல்லது வெளிப்புற அழுத்தங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிக்கொணரும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.