ஒலுவில் துறைமுகம் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு; துறைமுக அதிகார சபையின் அலட்சியமே பிரச்சினைக்கு காரணம் – ஹிஸ்புல்லாஹ்.!!!
ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிகளை முன்னாள் அமைச்சர் அஷ்ரப் எந்தவொரு தொழிநுட்ப ஆய்வு அறிக்கையும் மேற்கொள்ளாமல் நிர்மாணித்ததாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றாக பிழையான கூற்றாகும்.
அது தொடர்பில் நாங்கள் மன வேதனையடைகிறோம். அதேநேரம், ஒலுவில் துறைமுகம் மணல் அரிப்பால் பாதிக்கப்பட காரணம் துறைமுக அதிகார சபையின் கவனயீனமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையினுடைய முத்திரைத்தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் நிந்தவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கலாசார மண்டபத்தின் பணிகளை பூரணப்படுத்துவதற்கு ஜனாதிபதி 300 மில்லியன் ரூபா ஒதுக்கியமைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேநேரம், அங்கு இடம்பெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி ஒலுவில் துறைமுகம் தொடர்பில் பேசியிருந்தார். அதாவது, இத்துறைமுகம் சரியான தொழிநுட்ப அறிக்கை பெற்றுக்கொள்ளாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலே அடிக்கடி பாதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதிக்கு யாரோ வழங்கிய பிழையான தகவலினால் தான் இவ்வாறு தெரிவித்திருப்பார் என நினைக்கிறோம்.
உண்மையில் ஒலுவிலில் துறைமுகம் நிர்மாணிக்க 1997ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பான தொழிநுட்ப அறிக்கைகள் சாத்தியக்கூறு செய்வதற்காக 1999ம் ஆண்டு லங்கா ஹைட்ரோனிக் நிறுவகம் நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனம் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவமழைகளையும் பார்த்து, இத்துறைமுகம் பொருத்தமானதென அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.
அதேபோன்று, 1999ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பறிக்கை தயாரிக்கப்பட்டது. அத்துடன், சாத்தியக்கூறு ஆய்வு மத்திய பொறியியல் ஆலோசனை பிரிவால் மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையிலும் ஒலுவில் துறைமுகம் சாத்தியமானது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு இத்துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு, அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த தலைவர் அஷ்ரப்பின் வேண்டுகோளின் பிரகாரம், டென்மார்க் அரசாங்கம் வட்டியில்லா கடன் அடிப்படையில் 43 மில்லியன் யூரோ வழங்குவதற்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், எமது தலைவர் அகால மரணமடைந்தார்.
அதனைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு ஒலுவில் துறைமுக வேலைத்திட்டம் டென்மார்க் ஹொட்கார்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபையும் டென்மார்க் அரசாங்கமும் இணைந்து உலகில் பிரபல்யமான 5 தொழிநுட்ப நிறுவனங்களை நியமித்து, தொழிநுட்ப, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை போன்ற அனைத்து விடயங்களை மேற்கொண்ட பின்னரே துறைமுகம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், தலைவர் அஷ்ரப் ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிகளை எந்தவொரு தொழிநுட்ப அறிக்கை, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஆரம்பிக்கப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றாக பிழையான கூற்றாகும்.
ஆனால், இலங்கை துறைமுக அதிகார சபை இத்துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யத் தவறியிருக்கிறது. பொதுவாக எல்லா துறைமுகங்களிலும் பருவ மழைகளின் போது வருகின்ற மணலை சுத்திகரித்து அரிப்பு ஏற்படுகின்ற இடங்களுக்கு மணலை நிரப்புவதற்கு இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கொழும்பு, காலி துறைமுகத்திலும் அது இருக்கிறது. அதேபோன்று ஒலுவில் துறைமுகத்திலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டுமென சாத்திக்கூறு ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், துறைமுக அதிகார சபை அதனை மேற்கொள்ளத்தவறியதாலே ஒலுவில் துறைமுகத்தில் அரிப்பு ஏற்பட காரணமாகும். இந்த உண்மை தெரியாமல் ஜனாதிபதி தெரிவித்த கருத்து எமக்கு மன வேதனையளிக்கிறது என்றார்.