எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டிய ஆயத்தம்: உணவுப் பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை.!!!
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் உலகளவில் உருவாகக்கூடிய எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய சவால்கள் தொடர்பாகவும், அவற்றை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, எல்-நினோ நிலைமையால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்வரும் சிறுபோகச் செய்கைக்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைப்பது மற்றும் குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், எல்-நினோ நிலைமையை எதிர்கொள்வதற்கான தேசியத் திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்காக கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மேலதிகமாக ஆராய்வதற்காக உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை விரைவில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலைகளால் உருவான சவால்களை வெற்றிகரமாக கையாள்ந்ததைப் போலவே, எல்-நினோவால் உருவாகக்கூடிய உலகளாவிய சவால்களையும் திறம்பட சமாளிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாததால், எந்தவொரு அவசர நிலைக்கும் தயாராக இருக்க முன்கூட்டிய திட்டமிடல் அவசியம் என அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பல அமைச்சுகளின் செயலாளர்கள், சுகாதாரத் துறை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





