பாசிக்குடா சுற்றுலா வலயமாக மேம்படுத்த திட்டம்; மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்.!!!
பாசிக்குடாவை மையமாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலக வங்கியின் அனுசரணையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்திற்கான சாத்தியவளக் கூறறிக்கை தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வரும் கிறன்ட் ரொரன்ட் வாறத் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மெஹாலி பட்டேல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் ஜெயடுட் வைஸ்நவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உள்ளூர் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
வீதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நீர்வளங்கள், வடிகாலமைப்பு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
மேலும், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டதுடன், மீனவர்களுக்கென கல்குடாவில் தனியானதொரு அலகை உருவாக்குவது தொடர்பான திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.







