டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 10 பேருக்கு நீதிமன்றம் அபராதம்.!!!
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்த 10 பேருக்கு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மற்றும் கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான த. ரிஷிகோபன் மற்றும் எஸ். ரவிகரன் ஆகியோரால் விசேட களப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் தமது வீட்டு மற்றும் காணிச் சூழல்களை தூய்மையின்றி வைத்திருந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து, தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் சுகாதாரப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்ட 10 பேருக்கும் நீதவான் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தலா ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்
டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீடுகள், காணிகள் மற்றும் சுற்றுச்சூழலை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கும் பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.