சுகாதார விதிமீறல்; களுவாஞ்சிகுடி மொத்த விற்பனை கடைக்கு அதிரடி பூட்டு.!!!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடையொன்று, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (18) அதிரடியாக மூடப்பட்டுள்ளது.
மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட விசேட களப் பரிசோதனையின்போது, குறித்த பலசரக்குக் கடையில் பல்வேறு கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகரினால் களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
அத்துடன், பரிசோதனையின்போது அடையாளம் காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை, குறித்த கடையை உடனடியாக மூடி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பில் தொடர் நடவடிக்கை
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சுகாதாரப் பிரிவினரால் விற்பனை நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மத்தியில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து விற்பனை செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன.

