தலவத்துகொடையை உலுக்கிய தீ விபத்து: மூவர் பரிதாப பலி.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
தலவத்துகொட சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (09) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கடுமையாகக் காயமடைந்திருந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உணவகத்தில் திடீரென தீ பரவியதை அடுத்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
தீ விபத்தின் போது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூவரும் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பின்னர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.