“பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றி நாம் அனைவரும் இலங்கையர்” – சஜித் பிரேமதாச.!!!
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்; மாகாண சபைத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தல்
இலங்கையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேதங்களைக் கடந்து, அனைவரும் ‘இலங்கையர்’ என்ற அடையாளத்துடன் முற்போக்குத் தேசியவாதத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இன வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதுடன், அவர்களிடம் மன்னிப்பும் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தநாதன் அடைக்கலநாதன் முன்வைத்த, கறுப்பு ஜூலை இன வன்முறைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிதல், ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுதல் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கக் கோரும் தனியார் பிரேரணை மீதான விவாதத்தில், இன்று (09) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நாடு என்ற வகையில் உரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை மக்களை நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மீண்டும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்
இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொண்டு, இன, மத, சாதி, வர்க்க, கட்சி மற்றும் அந்தஸ்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
அத்துடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் முழுமையாக நடைமுறைப்படுத்துவது தமது பொறுப்பு எனத் தெரிவித்த அவர், ஒற்றையாட்சி நாட்டிற்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை இதன்மூலம் உறுதிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பல்வேறு கருத்து விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்
மாகாண சபைத் தேர்தலைத் தாமதமின்றி நடத்த வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாச, தேர்தலை நடத்தாமல் இருப்பது மக்களின் இறையாண்மைக்கு ஏற்படும் பாதிப்பாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களின் காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன், காணிகளை இழந்த மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கைகள் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஏதேனும் காரணங்களால் குறிப்பிட்ட காணிகளை மீள வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நஷ்டஈட்டையாவது வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘Tear Drop Nation’ திரைப்படத்தைப் பார்வையிடுமாறு அழைப்பு
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமின் மகள் சாரா கபீர் உருவாக்கியுள்ள ‘Tear Drop Nation’ திரைப்படம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.
அத்திரைப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில கருத்துக்களுடன் தமக்கு முரண்பாடுகள் இருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நாட்டின் மக்கள் அனைவரும் அத்திரைப்படத்தைப் பார்வையிட வேண்டும் என அவர் யோசனை முன்வைத்தார்.
பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தனது உரையில் மேலும் தெரிவித்தார்.