ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்.!!!
இம்முறை புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் முக்கிய மத விழாக்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாள் இம்முறை மே 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசேட தொழுகைகள் நடைபெறும் பள்ளிவாசல்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வழிபாட்டிற்கு வருவோருக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இஸ்லாமிய மக்கள் அதிகமாக நடமாடும் நகரப் பகுதிகளை மையமாகக் கொண்டு நடமாடும் ரோந்துச் சேவைகள், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புலனாய்வுப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள பொலிஸார், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 / 118 அவசர அழைப்பு இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய மக்கள் தங்களது மத வழிபாடுகளை அச்சமின்றியும் தடையின்றியும் அமைதியான சூழலில் நிறைவேற்றுவதற்குத் தேவையான வசதிகளை உறுதி செய்வதோடு, மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.