இலங்கைக்கு விரைவில் 695 மில்லியன் டொலர் நிதி உதவி: சர்வதேச நாணய நிதியத்தின் ஒருங்கிணைந்த மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவு.!!!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகச் சபை, இலங்கையின் 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இடம்பெற்ற ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியாக கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தவணையுடன், IMF திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இலங்கைக்கான இந்த விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம், 2023 மார்ச் 20 ஆம் திகதி IMF நிறைவேற்றுச் சபையால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் மூலம் நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், பணவீக்க கட்டுப்பாடு, நிதித்துறை நிலைத்தன்மை, ஆளுகை மேம்பாடு, ஊழல் குறைப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பது முக்கிய இலக்குகளாகக் காணப்படுகின்றன.
IMF இன் துணை நிர்வாக பணிப்பாளரும் தற்காலிகத் தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்டுள்ள அறிக்கையில், சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை தனது பொருளாதார சீர்திருத்தங்களை வலுவாக முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, டித்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு போரின் தாக்கங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த எண்ணெய் விலைகள் மற்றும் குறைந்த சுற்றுலா வருவாய் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு போர் நீடித்தால் பொருளாதார அபாயங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என IMF எச்சரித்துள்ளது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில் நிதி தளர்வு நடவடிக்கைகள் அவசியமானவை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இயற்கை அனர்த்தங்களுக்குப் பின்னான மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக கூடுதல் செலவினங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீத முதன்மை இருப்பு இலக்கை அடைய இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரி வசூல் முறைகளை திறமையாக மாற்றுதல், முதலீட்டு சூழலை மேம்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்துதல் ஆகியவை தொடர்ந்தும் அவசியம் என IMF வலியுறுத்தியுள்ளது.