பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்கள்; ஆட்சேர்ப்புக்கு அனுமதி.!!!
• வருடத்திற்கு 2,000 பேர் சேவையிலிருந்து விலகல் – 38,000 உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை.
எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை இன்று (29) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சேவையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை மற்றும் உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொறுப்பான அமைச்சரிடம் அறிவித்ததன் பின்னர், மனித வளத்தை அதிகரிக்கும் வகையில் 10,000 பேரை புதிதாக இணைத்துக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் பொலிஸ் சேவையில் சுமார் 38,000 அத்தியாவசிய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்தப் பற்றாக்குறையுடனேயே பொலிஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடத்திற்கு சுமார் 2,000 உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகுகின்றனர் எனவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
இதனால், பொலிஸ் சேவையின் மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது முக்கியமான நடவடிக்கையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
