இலங்கையின் ரயில் போக்குவரத்தில் நவீனமயமாக்கல்; மின்சார ரயில் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பம்.!!!
இலங்கையின் பொதுப்போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் வகையில், ரூ.80 பில்லியன் மதிப்பீட்டுச் செலவில் மின்சார ரயில் சேவைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.
நவீன புறநகர் போக்குவரத்துக்கான உட்கட்டமைப்பு திட்டமிடல்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு திட்டப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பம்
ஆரம்பக்கட்ட அபிவிருத்திப் பணிகள் கொழும்பு (மருதானை) ரயில் நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த ஆகிய முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திட்டத்தின் கீழ் ஏனைய பிராந்தியங்களுக்கும் மின்சார ரயில் சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரூ.80 பில்லியன் ஒதுக்கீடு
இந்த விரிவான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.80 பில்லியன் மதிப்பீட்டிலான வரவு–செலவுத் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில் சேவைக்கு மாற்றம் செய்வதன் மூலம் தினசரி பயணிகளுக்கு திறமையான, விரைவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான பொதுப்போக்குவரத்து சேவையை வழங்குவதே பிரதான நோக்கம் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.