மீன்பிடியில் ஈடுபட்ட 21 வயது இளைஞர் சடலமாக மீட்பு; வலையில் சிக்கி பரிதாப பலி.!!!
– கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –
கற்பிட்டி கடற்பரப்பில் உள்ள பத்தளங்குண்டு தீவுக்கு அருகில் சுழியோடி முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் மீன்பிடி வலையில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
கற்பிட்டி ஜனசவிபுர பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், ஏனைய மீனவர்களுடன் இணைந்து சுழியோடி முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றின் சீற்றம் காரணமாக மீன்பிடி வலையில் சிக்குண்டு, கடலின் மேற்பரப்புக்கு வர முடியாமல் அவர் உயிரிழந்திருக்கலாம் என அவருடன் சென்றிருந்த ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து, உயிரிழந்த இளைஞரின் சடலம் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞர் 21 வயதுடைய கற்பிட்டி ஜனசவிபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.