22ஆவது திருத்தத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பும் உயர் நீதிமன்றம் சென்றது.!!!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வைக் கோரி, யின் மகளிர் அமைப்பினால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பு மற்றும் கட்சியின் சார்பில், அந்த அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுராதா லக்மினி குருகே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் சில ஏற்பாடுகள், தற்போது பதவியில் உள்ள நீதியரசர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனம், அதிகாரப் பிரிப்பு தத்துவம் மற்றும் அதிகாரக் கட்டுப்பாடுகள், சமநிலை ஆகியவற்றில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பலப்படுத்துவதற்கும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கும் அமைய வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்தத் திருத்தம் போதுமான மக்கள் கலந்துரையாடல்கள் இன்றியும், வெளிப்படைத்தன்மையற்ற வகையிலும் அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறைமைக்கும், 4(இ) உறுப்புரையின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள மக்களிடமிருந்து பிரிக்க முடியாத இறைமை அதிகாரத்திற்கும் இந்தத் திருத்தம் நேரடியான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீதித்துறையின் சுயாதீனத்துடன் தொடர்புடைய அரசியலமைப்பு ஏற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, பாராளுமன்றத்தின் தேவையான பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.