இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பாதையில்; மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி பயணிக்க வேண்டும் – ஜனாதிபதி.!!!
இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பொருளாதார அளவுகோள்களின் மூலம் தெளிவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடித்தளமாகக் கொண்டு நாட்டை மாற்றத்திற்குரிய புதிய யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினருடன் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு அண்மைக்காலத்தில் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்களை வெறுமனே பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக மாத்திரம் பயன்படுத்தாமல், அவற்றின் பயன்களை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்வை இலகுபடுத்துவதற்கும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருளாதார மீட்சியின் பலன்கள் சாதாரண மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதுடன், நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடித்தளமாக தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், அரசாங்க வருவாய் அதிகரிப்பு, நிதி ஒழுக்கம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை IMF பிரதிநிதிகள் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளமையும் பொருளாதார மீட்சிக்கான முக்கிய அறிகுறியாக ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பாதுகாத்து, 2027ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அப்பால் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
