மக்கள் கருத்தின்றி சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களும் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு.!!!
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறியாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரு சட்டமூலங்கள் தொடர்பிலும் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சனிக்கிழமை காலை நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த சட்டமூலங்களுக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைத்துள்ள சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி, பரந்துபட்ட இணக்கப்பாட்டை எட்டிய பின்னரே அவற்றை முன்னெடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கும் தீர்ப்புக்கு அரசாங்கம் மதிப்பளிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் மூலம் மக்கள் ஆட்சியிலிருந்து விலகுமாறு தீர்மானித்தால், அதனை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டமூலங்களும் அடிப்படை உரிமைகள், சிவில் சுதந்திரங்கள் மற்றும் ஊடகச் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை முன்வைத்து தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை (06) கொழும்பில் குறித்த சட்டமூலங்களைத் திரும்பப் பெறுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்த பின்னரே இரு சட்டமூலங்கள் தொடர்பிலும் இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.