திறைசேரியில் பணத்தைச் சேமிப்பது மட்டும் அரசின் இலக்காக இருக்கக்கூடாது: மக்களின் வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு காணுங்கள் – இம்ரான் எம்.பி.!!!
திறைசேரியில் நிதியைச் சேமிப்பதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மூன்று வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அத்துடன், பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளைக்கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் பல குடும்பங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், திறைசேரியில் போதியளவு நிதி இருப்பதாக ஜனாதிபதியும் சில அமைச்சர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிப்பதற்கு அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை கவலையளிக்கின்றது.
அரசாங்கம் என்பது மக்களுக்காகவே செயற்பட வேண்டும். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் வழங்குவதாக வாக்குறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனவே, திறைசேரியில் நிதியைச் சேமிப்பதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், அந்த நிதியைப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது, மக்களின் பிரச்சினைகள் போதிய கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
எனவே, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரச் சுமைகளைக் குறைப்பதற்கும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.