நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைபாடே வரிசைகளுக்குக் காரணம் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்.!!!
நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதுடன், தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சில தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நஷ்டத்தைக் காரணமாகக் கொண்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைபாடு காரணமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன், அப்பகுதிகளில் வாகன வரிசைகளும் உருவாகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், உண்மையில் நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.