உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 7, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

கிழக்குக் கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனவர்: விரைந்து மீட்ட கடற்படையினர்.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

திருகோணமலைக்கு அப்பால் கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மீட்கப்பட்ட மீனவர் ஒருவர், பின்னர் ஆபத்தான உடல்நிலைக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரால் அவசரமாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மீட்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (06), கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகப் புறப்பட்டுச் சென்ற ‘கிஷான் புத்தா’ (IMUL-A-0831 TLE) எனும் பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலை பொல்டர் முனையிலிருந்து சுமார் 54 கடல் மைல் தொலைவில் கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்த மீனவர் ஒருவர் தவறுதலாகக் கடலில் விழுந்துள்ளார்.

பின்னர் அவர் மீட்கப்பட்ட போதிலும், ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாக அவரது நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது.

இதனையடுத்து, குறித்த மீனவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்குவதற்காக அவரை கரைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் அறிவித்தது.

இதற்கமைய, கிழக்குக் கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் P 474 அதிவேக தாக்குதல் படகை அனுப்பி வைத்து இலங்கை கடற்படையினர் அவசர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கடற்படையினரால் குறித்த மீனவர் படகில் ஏற்றப்பட்டு, ஆரம்பகட்ட முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேவேளை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் ஆபத்துக்குள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1300319

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time