மட்டக்களப்பில் களைகட்டிய கைவினை மற்றும் வர்த்தகக் கண்காட்சி.!!!
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் “Hands and Heritage East – 2026” கைவினைப் பொருட்கள் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வியாழக்கிழமை (03) கோலாகலமாக ஆரம்பமானது.
கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, கிழக்கு மாகாண கிராமியத் தொழில்கள் திணைக்களம், கிராம அபிவிருத்தி திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
கிழக்கு மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்டோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கண்காட்சியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவற்றைப் பார்வையிடவும் கொள்வனவு செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியம், கலை, கலாசாரம் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சிகளை வெளிக்கொணரும் முக்கிய நிகழ்வாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.












