இன்று முதல் நாடளாவிய தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!!!
• கட்டுநாயக்க சுகாதார அலுவலக விவகாரம்; தரவுகள், அறிக்கைகள் வழங்கல் நிறுத்தம்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை உரிய தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்படி, சங்கத்தின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைய, நாடு முழுவதிலும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை முற்றாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிக்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் பின்னர் தரவு அமைப்புகளில் மீண்டும் புதுப்பிக்கப்பட மாட்டாது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது தொடர்பில் நியாயமான விசாரணையொன்றை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கும் தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு காணும் நோக்கில் நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் தாம் தயாராக இருப்பதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.